தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் ஈழம் அமைத்திட உலக நாடுகளுக்கு வைகோ கோரிக்கை

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வழங்கவும், தமிழ் ஈழம் அமைந்திடப் பொது வாக்குப்பதிவு நடத்தவும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Vaiko appeals to world leaders to hold a general referendum on location of Tamil Eelam
Vaiko appeals to world leaders to hold a general referendum on location of Tamil Eelam

By

Published : Feb 2, 2021, 11:48 AM IST

சென்னை:ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற இருப்பதை ஒட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மதிமுக சார்பில், அதன் பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளார்.

அதில், "கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையின் இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்துவருவதற்கு, அசைக்க முடியாத ஆவணங்கள் சான்றாக இருக்கின்றன.

2009 மே மாதம், மூன்று லட்சத்து 30 ஆயிரம் மக்களை, முள்ளிவாய்க்கால் என்ற இடத்திற்குள் சுற்றிவளைத்தனர். அந்த வேளையில், செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களை முடக்குவதற்காக, பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து, வெள்ளை வேன்களில் ஆள் கடத்தி, அவர்களைக் காணாமல்போகவும் செய்தனர்.

பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கோரி, இலங்கைத் தீவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டக் களத்தின் முன்னணியில் தமிழர்கள் இருந்தனர். 1948ஆம் ஆண்டு, இலங்கைக்கு விடுதலை அளித்தபோது, ஆட்சி அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். அதன்விளைவாக, தமிழ் மக்கள், இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுவிட்டனர்.

அதன்பிறகு, சிங்கள ராணுவம், காவல் துறையினரின் உதவியோடு, தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கத் தொடங்கினர். தமிழர்களின் தாயகப் பகுதிகளில், எத்தனையோ இந்துக் கோயில்களை உடைத்து நொறுக்கிவிட்டனர். இலங்கை அரசே இதை ஒப்புக்கொண்டு இருக்கின்றது.

1993ஆம் ஆண்டு வரையிலும், 1479 இந்துக் கோயில்கள் தாக்கி அழிக்கப்பட்டு இருப்பதாக, அந்த நாட்டின் மத, பண்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருக்கின்றது. இன்னும் 128 இந்துக் கோயில்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஒட்டுமொத்தமாக இலங்கையில் உடைக்கப்பட்ட இந்துக் கோயில்களின் எண்ணிக்கை 2076 ஆகும்.

எப்போதெல்லாம் சிங்களவர்ளுக்கு வெறி ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம், அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமிழர்களைத் தாக்குவதும், தமிழர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துவதும் அவர்களது வாடிக்கை. இத்தகைய கொடுமைகளால், தமிழர்கள், தங்களுக்கெனத் தனிநாடு அமைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

1976 மே 14 ஆம் நாள், ஒரு வரலாற்றுத் திருப்பம் நிகழ்ந்தது. தந்தை செல்வா தலைமையில், அனைத்துத் தமிழ் அமைப்புகளும், வட்டுக்கோட்டையில் ஓரணியாகத் திரண்டு, தன்னாட்சி உரிமைக் கோரிக்கையைத் தீர்மானமாக வடித்தனர்.

1983 ஆம் ஆண்டு, இனப்படுகொலைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தனர். மிகக் கொடூரமான தாக்குதல், வெளிக்கடைச் சிறையில் நிகழ்ந்தது. அங்கே அடைக்கப்பட்டு இருந்த, வீரத்தமிழ் இளைஞர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட 58 தமிழர்களை, கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றனர். இந்தப் படுகொலைகள்தான், உலகம் முழுமையும் வாழ்கின்ற தமிழர்களின் உள்ளங்களில் கோபத் தீயை மூட்டியது.

1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், இலங்கை அரசுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் இடையே, பூடான் நாட்டின் தலைநகர் திம்புவில், அமைதிப்பேச்சுகள் நடைபெற்றன. அப்போது, தமிழர்களை, தனித் தேசிய இனமாக ஏற்க வேண்டும். தமிழர்களின் தாயக உரிமை, அதன் எல்லைகள், இறையாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தனிநாடு கேட்பதற்கு உரிமை உண்டு. அனைத்துத் தமிழர்களுக்கும் குடி உரிமை வழங்க வேண்டும் என்ற நான்கு கோரிக்கைகளைத் தமிழர்கள் முன்வைத்தனர்.

பின்னர், 1987 ஆம் ஆண்டு, இந்திய-இலங்கை அரசுகள் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதன்பிறகு, நோர்வே அரசு தலையிட்டு, அமைதிப்பேச்சு நடத்த ஏற்பாடு செய்தது. அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அதற்கு ஒப்புக்கொண்டார்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே, முதல் மற்றும் இரண்டாம் சுற்று அமைதிப்பேச்சுகள், 2002 ஆம் ஆண்டு தாய்லாந்திலும், மூன்றாவது சுற்று பேச்சுகள், நோர்வே தலைநகர் ஓஸ்லோவிலும் நடைபெற்றன. ஆனால், இலங்கைக் குடியரசுத் தலைவரான சந்திரிகா குமாரதுங்கே, இந்தப் பேச்சுகளை முனைமுறித்தார். அதன்பிறகு, மிகக் கொடுமையான ஒரு படுகொலை அரங்கேறியது. 2006 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் நாள், செஞ்சோலை என்ற இடத்தில், ஆதரவு அற்ற குழந்தைகள் காப்பகத்தின் மீது, இலங்கை வான்படை குண்டுகளை வீசியதில், 61 குழந்தைகள் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டனர். 170 குழந்தைகள், கை, கால்களை இழந்தனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம், 1,47,000 தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்கியது. 2009 ஆம் ஆண்டு, நோர்வே, பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்ற, புலம்பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் இடையே, ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் அமைவதற்கு, அவர்கள் பெரும் ஆதரவு ஆதரவு அளித்தனர்.

2011 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம், ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில், ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, அரசு அமைப்புச் சட்டத்தின்படி, இலங்கை அரசு தீர்வு காணத் தவறியது. இலங்கை விடுதலை பெற்ற நாள் முதல், தமிழர்களை ஒடுக்குவதற்கும், முற்றுமுழுதாக அழிப்பதற்கும், தமிழ் ஈழத் தாயத்தை இல்லாமல் ஆக்குவதற்கும் திட்டம் வகுத்து, தமிழர்களைப் பெரும் அளவில் கொன்று குவித்தது. அங்கு மனித உரிமைகள் நசுக்கப்பட்டன.

போர் முடிவுற்ற பின்னரும்கூட, மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. செய்தியாளர்கள் மிரட்டப்படுகின்றார்கள். தாக்கப்படுகின்றார்கள் என, ஐ.நா. அறிக்கை கூறுகின்றது. எனவே, இலங்கை அரசு மீது, இந்திய அரசு பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.

அவர்களை, போர்க்குற்றவாளிகள் என அறிவிக்கும்படி, ஐ.நா. மன்றத்தில் கோர வேண்டும். விடுதலைப் புலிகள் உட்பட, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அனைத்திற்கும் மேலாக, இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களைப் பிரித்து, தனித்தமிழ் அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் கோருகின்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அந்தத் தீர்மானம் கோருகின்றது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும், அந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது.

எனவே, ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் மற்றும் ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து, கீழ்காணும் கோரிக்கைகளை ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும் என, நாங்கள் கோருகின்றோம்.

1. ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும். ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

2. 2015 பிப்ரவரி 10 ஆம் நாள், இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை, ஏற்க வேண்டும்.

3. இலங்கை அரசு நடத்துகின்ற எந்த விசாரணையின் மீதும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை; எனவே, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

4. இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி நிரல் 4 இன்படி, சிறப்பு ஆணையர் (Special Rapporteur) ஒருவரைத் தெரிவு செய்து, இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைக் கண்காணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

அந்த ஆணையர்,

அ) இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;

ஆ) தொடர்பு உடைய உறுப்பினர்களுடன், இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

இ) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில், மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா. பொதுப்பேரவைக்கும், மனித உரிமைகள் மன்றத்திற்கும் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும்.

ஈ) பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர வேண்டும். அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து நீதி வழங்க வேண்டும்" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details