தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2019, 11:30 PM IST

ETV Bharat / state

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழ்நாடு இணையக்கூடாது!’

சென்னை: நேற்று டெல்லியில் நடந்த மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அமைச்சரின் பேச்சைக்கண்டித்தும், 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தில் இணையக்கூடாது எனவும் மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் தனித்தனியே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

vaiko-and-stalin-statement-about-one-nation-one-ration-card-scheme

'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' எனும் மத்திய அரசின் திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், நேற்று டெல்லியில் நடந்த மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், பேசிய தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வரும் பிறமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இக்கருத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

  • தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்து வகை குடும்ப அட்டைகளுக்கே அத்தியாவசியப் பொருட்களைக் கொடுக்க முடியாமல் திணறும் அதிமுக அரசு, புதிதாக 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்ற திட்டத்தில் சேர்ந்து - தமிழ்நாட்டில் நீண்ட காலமாக உள்ள பொது விநியோகத்திட்டத்தையே இழுத்து மூடத் தயாராகிவிட்டது.
  • தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணை ஒதுக்கீட்டைக் கூடப் பெற வக்கில்லாத அதிமுக அரசு, இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ரேசன் பொருட்களையும் 'ஒரே நாடு ஒரே அட்டை' திட்டத்தில், மக்களுடைய இசைவைப் பெறாமல், இணைவதன் மூலம் தாரை வார்க்க முடிவு செய்திருக்கிறது.
  • குறிப்பாக, இதுகுறித்து சட்டமன்றத்தில் திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது, “தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும்” என்று கூறிவிட்டு, இப்போது “வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும்” என்று உணவு அமைச்சர் கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
  • அதிமுக ஆட்சியைப் பொறுத்தவரை அமைச்சர்களும், முதலமைச்சரும் சட்டமன்றத்தில் கொடுக்கும் வாக்குறுதி ஒன்று - ஆனால் அவர்கள் மத்திய பாஜக அரசுக்கு அடிபணிந்து வெளியில் செயல்படுவது வேறு ஒன்று என்பதையே இந்த 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
  • மாநில உரிமையை விட்டுக் கொடுத்து - மாநிலத்தில் உள்ள பொது விநியோகத் திட்டத்திற்கும் ஆபத்தை உருவாக்கும் வகையில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையக்கூடாது என்றும், அவ்வாறு ஒரு முடிவு எடுக்கும் முன்பு 1.99 கோடி கார்டு உரிமையாளர்களிடமும், சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் ஜனநாயக ரீதியாகக் கருத்துக்களைக் கேட்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  • ‘பெயர் அளவுக்குக்கூட இந்தத் திட்டத்தை எதிர்க்காமல், ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த, மத்திய பாஜக அரசின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு அடிபணிந்து இருப்பதையே, அவரது கருத்து எதிரொலிக்கின்றது.
  • தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுப்பகிர்வு முறையைச் சீர்குலைக்கவும், வட இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வரும் மக்களை ஊக்குவித்து, தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றுவதற்காகவும்தான், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப்பகிர்வு முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று, பாஜக அரசு ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.
  • இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும். பொதுப்பகிர்வு முறை என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலின் கீழ் வருவதைப் பயன்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
  • தமிழ்நாட்டில் ஒரு கோடியே 99 லட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு, அவை ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டு அடிப்படைத் தேவைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
  • இந்நிலையில், மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து இத்திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால், தமிழக பொதுப்பகிர்வு முறை சீர்குலைந்து விடும். எனவே, ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழகத்தை இணைக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details