சென்னை:2007ஆம் ஆண்டு சபரி முத்து என்பவரிடம் நடிகர் சிங்கமுத்து கூறியதன் அடிப்படையில் தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியில் மூன்று ஏக்கர் 52 சென்ட் நிலத்தை வடிவேலு வாங்கியுள்ளார்.
தான் வாங்கிய இடத்தில் கழிவுநீர் பண்ணை வருவதால், அரசு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறி நடிகர் சிங்கமுத்து இந்த நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் எனத் தன்னிடம் கூறியதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், அசோக் நகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தாம்பரத்தைச் சேர்ந்த சேகர் என்பவருக்குப் பொது அதிகார பத்திரத்தை வடிவேலு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலத்தைப் பார்க்கவ் பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு 20 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி, நடிகர் சிங்கமுத்து பணத்தை கொடுத்ததாக வடிவேலு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2010ஆம் ஆண்டு வடிவேலுவிடம் வருமான வரி தணிக்கை செய்ய வந்தபோது, தாம்பரம் பெருங்களத்தூரில் வாங்கிய நிலத்தை ஒரு கோடியே 93 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும் அது தொடர்பாக வரி செலுத்தப்படவில்லை எனவும் அலுவலர்கள் குற்றஞ்சாட்டினர்.
அப்போதுதான் சிங்கமுத்து, சேகர் என்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரோடு சேர்ந்து தன்னை மோசடி செய்தது வடிவேலுவுக்குத் தெரியவந்தது. இதனையடுத்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.