சென்னைவடபழனி மன்னார் முதலி முதல் தெருவில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடந்த 16 ஆம் தேதி புகுந்த 7 பேர் கொண்ட கும்பல், நிறுவன ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி லாக்கரில் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.
அப்போது பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் மற்றும் சில ஊழியர்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் துரத்தி கொள்ளையர்களில் ஒருவனான விருகம்பாக்கத்தை சேர்ந்த சையது ரியாஸ் (22) என்பவரை பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களுள் ஒருவரான சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறு ரியாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இஸ்மாயில், பரத், கிஷோர், ஜானி, தமிழ் செல்வன் மற்றும் கண்ணன் (எ) மொட்டை ஆகியோர் சையது ரியாஸுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் ஆந்திரா, பெங்களூர் மற்றும் திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.
இந்நிலையில் கொள்ளையர்களில் ஒருவரான தமிழ் செல்வனின் நண்பரான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கிஷோர் வடபழனி காவல்துறையினரிடம், தமிழ் செல்வன் தன்னை வந்து சந்தித்து 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக கிஷோர் வீட்டிற்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர் கிஷோரிடம் விசாரணை நடத்தினர்.