தமிழ்நாட்டில் இரண்டாம் அலை கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று (மார்ச் 30) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
1. ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை மேலும் தீவிரப்படுத்த ( increased testing ) முடிவெடுக்கப்பட்டது. இப்பரிசோதனையை சில நகரங்களிலும், சில மாவட்டங்களிலும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் கூடுதலாக பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோய் உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் (Contacts), நோய் அறிகுறி காணப்படுபவர்களுக்கும் (Influenza Like Illness / Severe Acute Respiratory illness) கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
2. நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள், அவர்களோடு உடனிருப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். கடந்த 7 நாள்களாக, சென்னையில் இறப்பு 0.6 விழுக்காடாகவும், செங்கல்பட்டு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 0.5 முதல் 0.8 விழுக்காடாகவும், மற்ற மாவட்டங்களில் 0.6 முதல் 0.1 விழுக்காடுக்கும் குறைவாகவும் உள்ளன. இறப்பின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3. இதற்கு முன் இயங்கி வந்த கோவிட் மையங்களை (COVID Care Centers) முழுமையாக மீண்டும் செயல்பட வைக்க வேண்டும்.