தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணிகள், சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றார்.
பதவி ஏற்ற பின் முதல் முறையாக ஸ்டான்லி மருத்துவமனை வந்த சுப்பிரமணியனுக்கு சுகாதாரத் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் கூறியதாவது,
`முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளேன். இங்கு1500 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திங்கள்கிழமை முதல் 500 புதிய ஆக்சிஜன் படுக்கை வசதி பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
வரும் மே 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் புதிதாக 12ஆயிரத்து 500 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு விடும். 'ரெம்டெசிவர்' மருந்துக்காக மக்கள் கீழ்பாக்கத்தில் காத்திருப்பதால் நாளை முதல் சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 'ரெம்டெசிவர்' மருந்து விற்பனை செய்யப்படவுள்ளது.
முழு ஊரடங்கு நாள்களிலும் தடுப்பூசி போடப்படும். கரோனாவுக்கு சித்தா, ஆயுர்வேதம் போன்ற சிகிச்சை முறை மீண்டும் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் அதிகளவில் உற்பத்தி செய்ய வரும் காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்` எனத் தெரிவித்தார்.