சென்னை:அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர மருத்துவப் பிரிவு படுக்கைகளை மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய மா. சுப்பிரமணியன், ”அண்டை மாநிலங்களில் கேரளாவில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு வருவோர் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வருவோர் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்று அல்லது இரு தவணை தடுப்பூசி போடப்பட்ட சான்றை காண்பிக்க வேண்டும். கல்லூரிக்கு வரும் மாணவர்களும் தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றை காண்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 10 நாள்களில் நாள்தோறும் ஐந்து லட்சம் அளவில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. சென்னையில் 200 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மற்ற மாவட்டங்களிலும் கூடுதல் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மலைவாழ் மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தயக்கம் உள்ளது. அவர்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சிறந்த முறையில் தடுப்பூசி செலுத்திவருவதைப் பாராட்டி இந்த மாதத்திற்காக இரட்டிப்பு அளவில் தமிழ்நாட்டிற்கு ஒரு கோடியே நான்கு லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது.
கல்லூரிகளிலும் தடுப்பூசி முகாம்
மேலும், புதிதாக யாருக்கும் கோவாக்சின் தடுப்பூசி போடுவது இல்லை. ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி போட இருக்கிறோம்.
பள்ளிக் கூடங்களில் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறிய அளவிலான இடம் போதுமானது என்பதினால் அவை தொடர்ந்து செயல்படும். பள்ளிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் அதிக மக்கள் கூடும் மையங்கள் மட்டும் மாற்றியமைக்கப்படும்.
கல்லூரிகளுக்கு நாளை (செப்டம்பர் 1) சென்று மாணவர்கள், பேராசிரியர்கள் ஊழியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனரா என்பதை ஆய்வுசெய்ய உள்ளோம். கல்லூரிகளிலும் தடுப்பூசி முகாம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசு