சென்னை: நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்து இருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜிகேபி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஜெயராஜ் பழனி பேசுகையில், "இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். முதலில் 'சூழ்' எனும் பெயரில் திருநங்கைகளை முதன்மைப்படுத்திய படைப்பை உருவாக்கினேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண் பாலினத்தவருக்கு இருக்கும் சுதந்திரத்தைப் போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த படைப்பு" என்றார்.
நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசுகையில், "வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தின் கதையை இயக்குநர் எனக்கு விவரித்த போதே எனக்குப் பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் பலர் எல்ஜிபிடி எனும் பிரத்யேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். இந்தப் படத்தின் படபிடிப்பின் போது அயராது பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்" என்றார்.