உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கொள்ளையடித்த வழக்கில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது, பேசிய நீதிபதி கிருபாகரன், 'தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருகிறது. பிகார், ஜார்கண்ட்டில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழ்நாட்டிற்கு வருகிறது. இவை குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவர்களில் பலர் துப்பாக்கிக்கான உரிமத்தினைக் கொண்டுள்ளனர். அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாசாரத்தைத் தடுக்க வேண்டும்.
உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து விட முடியாது' என்றார்.
மேலும், நீதிபதிகள் இந்த வழக்கில் , தமிழ்நாடு உள்துறைச் செயலர், காவல் துறைத் தலைமை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையரை எதிர் மனுதாரராக சேர்த்தனர்.