சென்னை: கரோனா தொற்றின்போது தும்மல் மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மூக்கு, தொண்டையில் பாதிக்கப்பட்ட சளித்துளிகள் உருவாவதைத் தடுப்பதுடன், நுரையீரலின் ஆழமான பகுதிக்குள் நுழைந்து கரோனா பரவாமல் தடுக்க உதவுகின்றன எனவும்; நிமோனியா, தீவிரமான நுரையீரல் நோய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த தடுப்பூசி உதவிகரமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
சென்னை ஐஐடி, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், கோவிட் தொற்று எவ்வாறு ஆபத்தானதாக மாறும் என்பதற்கு நம்பத்தகுந்த செயல்முறையை எடுத்துக்காட்டி உள்ளனர். மூக்கு, தொண்டையில் இருந்து கீழ் சுவாசக் குழாய்க்கு கோவிட்-19 வைரஸ் பரவச்செய்யும் செயல்முறையை புரிந்து கொள்வதற்காக உருவகப்படுத்துதல் ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டனர். சுவாசக் குழாயின் சளி சுரப்பிகளைப் பாதிக்கும் இந்த வைரஸ்கள் நுரையீரலுக்குள் துளிகளாகப் பரவி, அதன் மூலம் தீவிர நோய்களை உண்டாக்குவதையும், அத்தகைய பரவலைத் தடுக்கும் வழிகளைப் பரிந்துரைப்பதற்காக கணித மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
மூக்கு, தொண்டையில் இருந்து நுரையீரலுக்கு கோவிட்-19 வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். சுவாச அமைப்பில் உள்ள சளியின் வாயிலாக வைரஸ் நகரக்கூடும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இருப்பினும், அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ரத்த ஓட்டத்தில் நுழைந்து நுரையீரலுக்குச் செல்லக்கூடும் என மற்றொரு கருத்து முன்வைக்கப்பட்டதும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. வைரஸைக் கொண்ட சளித் துளிகளை மூக்கு, தொண்டை வழியாக நுரையீரலுக்குள் மக்கள் உள் இழுக்கும்போது பரவலாம் என்பது மற்றொரு கோட்பாடாகும்.
சளி மருந்துகளை பயன்படுத்தினால் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தலாம் - சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தகவல் - chennai iit news in tamil
சளி மருந்துகளை பயன்படுத்தினால் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தலாம் சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் முடிவுகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை ஐஐடி, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இந்த சிக்கல்களை கணக்கில் கொண்டு செய்யப்பட்ட கண்டுபிடிப்புகள் ஃப்ரான்டியர்ஸ் இன் ஃபிசியாலஜி என்ற ஓபன்சோர்ஸ் இதழில் வெளியிடப்பட்டது. அதன் இணைப்பு விவரம் வருமாறு: Frontiers in Physiology (https://doi.org/10.3389/fphys.2023.1073165).
இந்த ஆராய்ச்சியை சென்னை ஐஐடி அப்ளைடு மெக்கானிக்ஸ் துறை ஆசிரியரான மகேஷ் பஞ்சக்நுலா, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் அணுக்கரு ஆய்வுகள் மற்றும் பயன்பாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் ஆரண்யக் சக்ரவர்த்தி, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியரான நீலேஷ் ஏ.படங்கர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.
சென்னை ஐஐடி அப்ளைடு மெக்கானிக்ஸ் துறை பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறும்போது, ''மூக்கு, தொண்டையில் இருந்து நுரையீரலின் ஆழமான பகுதிக்கு நகரும் துளிகளின் கணித மாதிரி மூலம் கடைசிக் கோட்பாட்டை நாங்கள் ஆய்வு செய்தோம். கோவிட்-19 நோய்த்தொற்றின் முதல் அறிகுறிகள் தோன்றிய 2.5 முதல் 7 நாட்களுக்குள் நிமோனியா, பிற நுரையீரல் பாதிப்புகள் ஏற்படலாம் என எங்கள் மாதிரிகள் எடுத்துக்காட்டுகின்றன. பாதிப்புக்கு உள்ளான சளித்துளிகள் மூக்கு, தொண்டையில் இருந்து நுரையீரலுக்குப் பயணிக்கும்போது இவ்வாறு நிகழ்கிறது.
சளித்துகள்கள் உருவாவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மூலம் வைரஸுடன் கூடிய சளித்துகள்கள் பயணிப்பதை முதல்கட்டத்தில் குறைக்க முடியும். தும்மல், இருமல் போன்றவை மூக்கு, தொண்டையில் உள்ள பாதிக்கப்பட்ட சளியை நீர்த்துளிகள் வடிவில் வெளியேற்றும். இருமல் சிரப்புகள், சளி நீக்க மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வது இத்தகைய நீர்த்துளிகள் உருவாவதைக் கட்டுப்படுத்தும் ஒரு உத்தியாகும். இதனால் பிறருக்குப் பரவுவதைக் குறைப்பது மட்டுமின்றி, கீழ் சுவாசக் குழாய்க்கு சளித்துகள்கள் தானாக செல்லாமல் தவிர்க்க முடியும்'' எனத் தெரிவித்தார்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் அணுக்கரு ஆய்வுகள் மற்றும் பயன்பாட்டுப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் ஆரண்யக் சக்ரவர்த்தி கூறும்போது, ''ஆய்வின் மூலம் பாதிக்கப்பட்ட சளித் துளிகள் சுவாசப் பாதையின் ஊடாகப் பயணிப்பது முக்கியப் பங்கு வகிப்பதுடன், பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு ஏற்ப நோய்த்தொற்றின் வளர்ச்சியும் தீவிரமும் இருக்கும் என்பதையும் கண்டுபிடித்தோம்'' எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் நீலேஷ் படன்கர் கூறும்போது, ''கடுமையான நோய்த்தொற்றைத் தடுப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை இந்தக் கண்டுபிடிப்பு வலுப்படுத்துகிறது. பி-லிம்போசைட்டுகள், டி-லிம்போசைட்டுகள் (அல்லது நினைவக செல்கள்) ஆகிய சிறப்பு செல்களை உடலில் உருவாக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. டி-லிம்போசைட்டுகள் வைரஸ் பெருக்கத்தை மட்டுப்படுத்துகின்றன. பி.லிம்போசைட்டுகள் வைரசை அழிக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன'' எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் மூலம் தும்மல் மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மூக்கு, தொண்டையில் பாதிக்கப்பட்ட சளித்துளிகள் உருவாவதைத் தடுப்பதுடன், நுரையீரலின் ஆழமான பகுதிக்குள் அவை நுழைந்து பரவாமல் தடுக்க உதவும். நிமோனியா, தீவிரமான நுரையீரல் நோய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த தடுப்பூசி உதவிகரமாக இருக்கும்.