தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - medical education

சென்னை: மருத்துவக்கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், சூரப்பாவை பதவி நீக்கம் செய்திட வலியுறுத்தியும் அக்டோபர் 20ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பும், மாவட்ட தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

Urges immediate approval of Governor for 7.5 per cent quota for rural students in medical education - Ramakrishnan CPM
Urges immediate approval of Governor for 7.5 per cent quota for rural students in medical education - Ramakrishnan CPM

By

Published : Oct 19, 2020, 5:57 AM IST

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தகுதி திறமை என்கிற பெயரில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் செயலில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு. இதன் ஒரு பகுதியாகவே நீட் தேர்வு திட்டமிட்ட சதியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் தேர்வைக் கூட முறையாகவும் துல்லியமாகவும் நடத்துவதற்கு திராணியற்றதாக உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை, நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒரு சட்டத்தை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இன்றுவரை அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

வழக்கமாக சமூக நீதிக்கு எதிராக, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தன்னுடைய வன்மத்தை கக்கும் பாஜக கூட இதற்கு எதிராக கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆயினும் ஆளுநர் இன்று வரை அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறார்.

இப்படி செய்வது தமிழக மக்களின் நலன்களையும் ஜனநாயக மாண்புகளையும் மீறுவதாகும். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இந்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இதுநாள் வரையிலும் அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது. தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி, பாரம்பரியம், ஜனநாயக மாண்புகள், சமூகநீதி கோட்பாடுகள் ஆகியவை பற்றி தெரியாத ஒருவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். அவர் கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் மாநில உரிமைகளுக்கு எதிராகவும், மாநில அரசை கலந்தாலோசிக்காமலும் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார்.

துணைவேந்தரின் இந்த அத்துமீறிய செயல் மாணவர் நலன்களை கடுமையாக பாதிக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் சூரப்பாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 20ஆம் தேதி அன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பும், மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details