சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 34ஆவது ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பாமக சார்பில் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய பின்னர், ‘அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, மது ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்போம்’ போன்ற 10 உறுதிமொழிகளை அனைவரும் ஏற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “திமுக ஓராண்டு ஆட்சியில், பத்து மாத காலம் கரோனாவில் சென்றுவிட்டது. அதில் அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர்.
திமுக சிறப்பான ஆட்சிக்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதன் வேகம் போதாது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டை முழுமையாக தடை செய்ய குழு பரிந்துரை செய்தும், இதுவரை தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.