இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில், "தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிப் பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து கூடுதலாக குடிநீர் வழங்க வழிவகை செய்யும் 'சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் பகுதி -1' எனும் திட்டத்திற்கு, அரசால் 2017 ஐனவரி 30ஆம் தேதி நிர்வாக உத்தரவு வழங்கப்பட்டு, 2017 டிசம்பர் 6 ஆம் தேதி முதல் வேலைகள் நடந்து வருகின்றன.
உலக வங்கி, தமிழ்நாடு நகர கட்டமைப்பு மேம்பாட்டு மையம் மற்றும் அம்ரூட் (AMRUT) திட்டத்தின் கீழ் ரூபாய் 543 கோடி நிதி உதவியுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஐந்து நகராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியைச் சேர்ந்த 1,14,045 குடியிருப்புகளில் வசிக்கும் 4,35,150 பேருக்குக் குடிநீர் வழங்குவதை இலக்காகக் கொண்ட இத்திட்டப் பணிகள் நிறைவுபெறும்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்கப் பெறும் என்பது இத்திட்டத்தின் இலக்கு ஆகும்.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை குறித்த தங்களின் குமுறல்களை நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பாளர்களிடம் காட்டியதை அறிய முடிந்தது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இப்பகுதியில், திட்டப் பணிகளைக் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து விரைந்து முடிக்க, குடிநீர் வடிகால் வாரியத்திற்குத் தக்க உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.