இன்றைய இணைய கலாச்சாரம் சமூகத்தில் நன்மை-தீமை இரண்டையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், ஆபாச காணொலிகளுக்கு வரைமுறை சரியாக இல்லையென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டிக் டாக் செயலிக்கு தடைவிதித்தது. தொடர்ந்து டிக் டாக் தரப்பு வாதங்களை கேட்ட பிறகு ஒரே வாரத்தில் உயர் நீதிமன்றம், ஆபாச காணொலிகள் குழந்தைகளை பாதிக்கும் என்று தடைவிதித்ததாகவும், இது போன்ற சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டிக் டாக் மீது விதித்திருந்தத் தடையை நீக்கியது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட போது அப்போதைய தொழில்நுட்பத் துறை அமைச்சர் கண்டிப்பாக டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் டிக் டாக் செயலி சர்ச்சையில் சிக்கியுள்ளது. டிக் டாக் செயலியில் இளைஞர்கள் பலர் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது போன்று அதிக அளவில் காணொலிகளை பதிவேற்றம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.