சென்னை:நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர், பக்கத்து வீட்டில் வசித்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சிறுமியை மிரட்டியதாகவும் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில், போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் சிறப்பு நீதிமன்றம், வெங்கடாச்சலத்திற்கு, போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு தண்டனையும் விதித்து தீரப்பளித்தது.
தண்டனை உறுதி
இந்தத் தீர்ப்பை எதிர்த்து வெங்கடாச்சலம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வெங்கடாச்சலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் கூறி, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
ஆனால், போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதி, இரு பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.