சென்னைமயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (60). மூதாட்டியான இவர் மண்ணடியில் உள்ள தனியார் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் கணினி ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கௌசல்யா நேற்று (ஜூலை 12) வேலை முடிந்துவிட்டு லிங்கி செட்டி தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரது பின்புறமாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். செய்வதறியாது திகைத்து நின்ற கௌசல்யா அந்த கொள்ளையனை பிடிக்க முயன்றார். ஆனால், கொள்ளையடித்தவுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கௌசல்யா வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வடக்கு கடற்கரை காவல் துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பதிவான காட்சிகளை வைத்து முக அடையாளங்களை கண்டறிந்தனர். பின்னர், சுமார் 2 மணி நேரத்திலேயே செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளையனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் உத்தர பிரேதச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த விவின் குமார் மிஸ்ரா (28) என்பது தெரியவந்தது. மேலும், இவர் திருவொற்றியூரில் தங்கி, மூதாட்டி வேலை பார்த்த அதே நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.