உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரத்தில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோவர்த்தன மலை. இந்த மலையயை இந்து கடவுள் கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் தூக்கி மதுரா மக்களை காப்பாற்றியதாக புராணங்களில் கூறப்படுகிறது. புனிதமாகக் கருதப்படும் இக்கோவர்தன மலை கற்களை வீட்டில் வைத்தால் நன்மை நடக்கும் என பரப்புரை செய்து, அதனை ஆன்லைனில் விற்க விளம்பரம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கேஷவ் முக்யா என்பவர் கோவர்த்தன காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரில், 'மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலும், அதை வணிகமாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள நபர் மீதும், கற்களை ரூ.5,175 ஆன்லைனில் விற்கும் விளம்பரத்தை அனுமதித்த இணையத்தளத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் போராட்டங்கள் நடத்தினர். 'இந்தியா மார்ட்' என்ற பொருட்கள் விற்பனை செய்யும் இணையதளத்தின் உரிமையாளர்கள் தினேஷ் அகர்வால், பிரிஜேஷ் அகர்வால், அங்கூர் அகர்வால் ஆகிய 3 பேர் மீது 2 பிரிவுகளில் கோவர்தன காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.