திருப்பூரைச் சேர்ந்த அழகுமலை கிராமப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்குச் சொந்தமான 12 ஏக்கர் பஞ்சமி நிலங்களை முத்துசாமி கவுண்டர் என்ற தொழிலதிபர் ஆக்கிரமித்து அந்நிலங்களில் கல்யாண மண்டபம், மசாஜ் சென்டர்கள் அமைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதோடு பஞ்சமி நிலம், கிராமநத்தம் மற்றும் கோயில் நிலங்களோடு சேர்த்து பொதுப்பாதையும் ஆக்கிரமிப்பு செய்து தீண்டாமை இரும்புத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தது. இதன் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேசிய பட்டியலின ஆணையத்திடம் கடந்த 2018ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்போது தேசியப் பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், அழகுமலை கிராமத்தில் நேரில் வந்து பட்டியலின மக்கள், அருந்ததியின மக்கள், மற்ற சமூக மக்களிடம் தனித்தனியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரகசிய விசாரணை நடத்தினார். இந்த விசாரணை தொடர்பாக விவரங்களை, பட்டியலின மக்களுக்குத் தெரியப்படுத்தாமல், தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், கோயிலைப் பாதுகாக்கவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இவ்வாறு பஞ்சமி நில பாதுகாப்பு தொடர்பாக அரசியல் சாசனத்திற்கு விரோதமான பரிந்துரைகளை முருகன் வழங்கி இருப்பதாகவும், அதை ரத்து செய்து, பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, குணசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்குத் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம், அதன் துணைத் தலைவராக இருந்தவரும், தற்போதைய தமிழ்நாடு பாஜக தலைவருமான முருகனை 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க....கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை