இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் ஒட்டனந்தல் கிராமத்தில் அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் கூழ் ஊற்றும் திருவிழா நடத்த வேண்டிய தேதி வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக இந்தாண்டு விழா நடைபெறவில்லை. ஆனால் தலித் மக்கள் தங்கள் பகுதியில் இதற்கான ஏற்பாட்டை செய்து உள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை உரிய நேரத்தில் தலையிட்டு விழாவை நிறுத்தி விட்டது. அவர்களும் தங்களுடைய தவறை உணர்ந்து விழாவை நடத்தவில்லை.
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ஒட்டனந்தல் கிராமத்தின் ஆதிக்க சாதியினர் தலித் பெரியவர்களை காலில் விழந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்த பின்னணியில் சாதியவாதிகள் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சாதியவாதிகள் கொடுத்த பொய் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், காலில் விழுந்தவர்கள் மீது கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது ஏற்புடையதல்ல. தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வராமல் தொடர்வதற்கு காவல்துறையின் இந்தகைய அணுகுமுறையும் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது.
சட்டத்தின்படி தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை சாதியவாதிகள் தரும் பொய் புகார்களைப் பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற பினையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வருகிறது.