சென்னை: இன்று (மே18) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA கமிட்டி) முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பலரது சிந்தனையின் கூட்டுச் சேர்க்கைதான் அரசு. அப்படிச் செயல்பட்டால்தான் அது மக்கள் அரசாக இருக்க முடியும். அந்த வகையில் பல்வேறு ஆலோசனைக் குழுக்களை அமைத்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்று செயல்பட்டு வருகிறோம்.
அந்த அடிப்படையில்தான் இந்தக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அரசினுடைய பல்வேறு நலத்திட்டங்கள், அது ஒன்றிய அரசின் திட்டமாக இருந்தாலும் சரி, மாநில அரசினுடைய திட்டமாக இருந்தாலும் சரி, அந்தத் திட்டத்தின் பலன் கடைக்கோடி மனிதரையும் சேரும்படி செயல்பட வேண்டும். அதுதான் நம்முடைய நோக்கமாக அமைந்திருக்கிறது.
மாநில அரசின் செயல்பாடு: அந்த வகையில், திட்டங்களின் செயலாக்கம், நிதிப் பயன்பாடு, வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி திட்டத்தை நிறைவேற்றுதல் போன்ற பல்வேறு அம்சங்களை கவனிக்கவும், கண்காணிக்கவும், திட்டங்களை ஒருங்கிணைத்து அதன் பயன்பாட்டினை உயர்த்தவும் என இவை அனைத்திற்கும் தான் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய நோக்கமாக இருக்கிறது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், எல்லாத் துறைகளும் ஒன்று போல முன்னேற்றம் காண வேண்டும். மருத்துவம், கல்வி, இளைஞர் நலன், வேளாண் மேலாண்மை, பெருந்தொழில்கள், நடுத்தர - சிறு - குறு தொழில்கள், நெசவாளர் மற்றும் மீனவர் நலன் என சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான தேவைகளை அறிந்து திட்டங்களை வகுத்து மாநில அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.