தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த அழுத்தம் கொடுப்பதா? - ராமதாஸ் - பல்கலைக்கழகங்கள் அவசரம் காட்டக் கூடாது

சென்னை: புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்காத நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக துணைவேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Universities should not rush to implement the new education policy said pmk founder Ramadoss
Universities should not rush to implement the new education policy said pmk founder Ramadoss

By

Published : Nov 3, 2020, 4:30 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ஆம் தேதி ஒப்புதல் அளித்த, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இது நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கும் பொறுப்பு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இக்கொள்கையை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஐந்து அறிவிக்கைகளை அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதியக் கல்விக் கொள்கையில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் கூட, சமூகநீதிக்கு எதிரான பல விஷயங்களும் உள்ளன. அதன் சாதக, பாதகங்களை ஆராயாமல் புதியக் கல்விக் கொள்கையை அப்படியே செயல்படுத்தி விட முடியாது. நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாகி விடும் என்பது தான் தமிழ்நாடு அரசு மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு. இதற்கு எதிரான புதியக் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டால் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்த விஷயத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து இறுதி முடிவு எடுப்பது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் முன்னாள் மற்றும் இந்நாள் துணைவேந்தர்கள் 6 பேர் கொண்ட உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை தமிழ்நாட்டு அரசிடம் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் புதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநில அரசு முடிவெடுத்து அதை மத்திய அரசிடம் தெரிவிக்கும்.

ஆனால், அதற்கு முன்பாகவே பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அளிக்கப்படும் அழுத்தம் பல்கலைக்கழக நிர்வாகங்களில் மட்டுமின்றி, மாணவர்கள் மத்தியிலும் தேவையற்ற பதற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. புதியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை காரணம் காட்டி தங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை பல்கலைக்கழக மானியக்குழு நிறுத்தி விடுமோ? என்ற அச்சத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளனர்.

பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மானியக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், மாநிலப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசுக்கு கட்டுப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் தான் செயல்பட முடியும். எனவே, புதிய கல்விக் கொள்கையை உயர்கல்வித்துறையில் நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு எந்த அழுத்தமும் தராமல் மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் விலகியிருக்க வேண்டும். தமிழக பல்கலைக்கழகங்களும் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் அவசரம் காட்டக்கூடாது ” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா 2ஆம் அலைக்கு நடுவே பள்ளிகள் திறப்பா? - ஸ்டாலின் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details