சென்னை:பிரதமர் நரேந்திரமோடி அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் அரசியல் லாபத்திற்காக இல்லாமல் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது என்றும், PFI அமைப்பு இளைஞர்களை sleeper cells போல பயன்படுத்துவதால் அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்,"சென்னைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். சென்னை விமான நிலையத்தில் எனக்கு அமோக வரவேற்பு தந்தனர். அதை பார்த்தபோது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்திற்கு அதிகளவிலான உறுப்பினர்கள் செல்வது உறுதி என்று தெரிகிறது. மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி வருவதும் உறுதி.
சில நாட்களுக்கு முன்பு என்ஐஏ சோதனை நடத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். PFI அமைப்பு இளைஞர்களை sleeper cells ஆக பயன்படுத்துகிறது. ஆகவே உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆணைப்படி அந்த இயக்கத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில அரசும் பிஎஃப்ஐ அமைப்பின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் அமைதியானவர்கள். ஆனால் இங்கு ஆட்சியில் இருப்போரின் செயல்பாடு வன்முறையையும் , தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பிரதமர் நாட்டு முன்னேற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளார். பிரதமரின் திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக இல்லாமல் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது. பாஜக சித்தாந்த ரீதியாக நாட்டை முன்னேற்றுவது பற்றி யோசிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதேபோல் செயல்பட்டால் அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர் .