சென்னை: துறைமுகத்தில் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சிக் கப்பலான சாகர் நிதி கப்பலை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டு, மூத்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், "ஆழ்கடல் வளங்களை கண்டறிந்து பயன்படுத்துவதற்கு இது போன்ற தொழில்நுட்பங்களைப் பறைச்சாற்றும் கப்பல்கள் அவசியம்.
ஆழ்கடல் இயக்கம், புவி அறிவியல் துறையால் 4,077 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
கடலில் உள்ள தாதுப்பொருள்கள், உயிரி பன்முகத்தன்மை, எரிசக்தி, நன்னீர் இருப்பை ஆய்வு செய்வதற்கான ஆழ்கடல் இயக்கத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும்.
3 நபர்களுடன் ஆழ்கடலில் 6,000 மீட்டர் ஆழத்திற்கு செல்லக் கூடிய மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி கலனை உருவாக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. அறிவியல் சென்சார் மற்றும் பிற கருவிகள் இதில் இடம் பெறும். இந்த இயக்கத்திற்கான உதிரிப் பாகங்கள் தயார் செய்யும் பணி இந்த ஆண்டில் தொடங்கும்" என்றார்.
இந்தக் கப்பல் புவி – அறிவியல், வானிலை மற்றும் கடலியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. 10,000 கடல் மைல்கள் (19,000 கிலோ மீட்டர்) தொலைவுக்கு 45 நாள்கள் வரை பயணம் செய்யக் கூடிய திறன் பெற்றது.
இதையும் படிங்க:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி - முதலமைச்சர் மரியாதை