புதுச்சேரி:ஒரு நாள் பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் ’அமித் ஷா’ சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்தை வந்தடைந்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட அவர் ஈஸ்வரன் கோயில் வீதியிலுள்ள மகாகவி பாரதியார் இல்லத்திற்குச்சென்றார். அங்கு பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்பு அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்ட அவர் தன் வருகையைப் பதிவு செய்தார்.
அதன்பிறகு அரவிந்தரின் ஆசிரமத்துக்குச்சென்றார். அங்கு உள்ள அரவிந்தர் சமாதி அன்னையின் சமாதிக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதனை முடித்துக்கொண்டு காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பல்கலைக்கழக கருத்தரங்கு அவையில் நடைபெற்ற ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் அவர் பங்கேற்றார். விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.