சென்னை:நாட்டில் ஒரே சீரான கல்வி முறை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்காக மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் (Banyan) என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (ஏப்ரல்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக, டில்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய உயர் கல்வித் துறை சார்பு செயலாளர் தினேஷ் டி. பாலி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை நாடு முழுவதும் இரண்டரை லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 6,600 வட்டாரங்கள், 6,000 ஊரக உள்ளாட்சி அமைப்புகள், 676 மாவட்டங்கள், 36 மாநிலங்களுடனும், பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம், தேசிய ஆசிரியர் கல்வி கழகம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம், மத்திய இடைநிலை கல்வி வாரியம், கல்வி நிறுவனங்கள், அரசு துறைகளுடனும் கலந்தாலோசித்து தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது.
இந்த ஆலோசனைகளை ஆராய்ந்த, மத்திய அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, 2016ஆம் ஆண்டு இறுதியில் அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அதனடிப்படையில் 2017ஆம் ஆண்டு பிரபல விஞ்ஞானி கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் வரைவு தேசிய கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டது.