சென்னை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 128 விமான நிலையங்களில் பணியாற்றும் இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு, கடந்த 2017-18, 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொடுக்க வேண்டிய போனஸ் தொகையை இதுவரை வழங்கவில்லை. அதன் பின்பு 2019-20, 2020-21 ஆகிய இரண்டு ஆண்டுகள் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போனஸ் என்பது யாருக்குமே இல்லை எனத் தெரிவித்தனர்.
ஆனால் ஏற்கனவே வழங்க வேண்டிய போனஸ் இரண்டு ஆண்டு (2017-18,2018-19) போனஸ் தொகையை இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள், ஒன்றிய அரசிடம் முறைப்படி, அவர்களுடைய தொழிற்சங்கம் மூலமாகக் கேட்டனர். அதற்கு ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு, இன்று(ஆ.21) வெள்ளிக்கிழமை உங்களுக்கு ஏற்கனவே வழங்க வேண்டிய இரண்டு ஆண்டு போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதன்படி விமான நிலைய ஊழியர்கள் போனஸ்காக காத்திருந்தனர். ஆனால் தற்போது ஒன்றிய நிதி அமைச்சகம், அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி, தற்போது போனஸ் இல்லை என்று கூறிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி முதற்கட்டமாகச் சென்னை உட்பட இந்தியாவில் உள்ள 128 விமான நிலையங்களிலும் இன்று பகல் ஒரு மணியிலிருந்து 2.30 மணி வரையில், உணவு இடைவேளை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் பற்றி முடிவு செய்யப்படும் என்று சென்னை விமான நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த போராட்டம் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. அனைத்து பணிகளும் வழக்கம் போல் நடக்கிறது.
இது சம்பந்தமாகத் தொழிற்சங்கத்தினர் கூறும் போது, எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமே தவிர, விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, பயணிகளுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது, என்பதற்காக முதற்கட்டமாக நாங்கள் தற்போது இந்த உணவு இடைவேளை போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம் என்று கூறுகின்றனர்.
விமான நிலைய ஆணைய ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒன்றிய நிதி அமைச்சகம் மறுப்பு இதையும் படிங்க:தமிழ்நாடு மீனவர் சுடப்பட்ட விவகாரத்தில் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்