தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான அறிவிப்புகள் ஏமாற்றம்'  - மருத்துவர் சங்கம் கருத்து!

சென்னை: மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கிறது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

union-budget-announcements-disappointed-doctors-association-for-social-equality
union-budget-announcements-disappointed-doctors-association-for-social-equality

By

Published : Feb 1, 2021, 9:21 PM IST

இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பான அறிவிப்புகளும், நிதி ஒதுக்கீடும் ஏமாற்றம் அளிக்கிறது. கரோனா பெருந்தொற்று காலக் கட்டத்தில் பொது சுகாதாரத்துறையை, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அத்தகைய சூழலில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நிதியான ரூ.2.23 லட்சம் கோடி போதாது. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதியிலிருந்து தான், பிரதமர் காப்பீடு திட்டத்திற்கும் நிதி வழங்கப்படுகிறது.

பிரதமர் காப்பீடு திட்டத்தின் மூலம் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளுமே பெரும் பயனை அடைந்து வருகின்றன. குறைவான நிதி ஒதுக்கீட்டால், அரசு மருத்துவமனைகள் வலுவிழந்து வருகின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்துதான், கரோனா தடுப்பூசிகளுக்கும் நிதி வழங்கப்படும் எனத் தெரிகிறது. கரோனாவை தடுத்திட தடுப்பூசி அவசியம். மிகவிரைவாக, குறைந்த பட்சம் 70 விழுக்காடு மக்களுக்காவது தடுப்பூசி வழங்கிட வேண்டும். அப்பொழுதுதான் தடுப்பூசிகள் மூலம் கரோனா பரவலை தடுக்க முடியும்.

அந்த இலக்கு குறித்த உத்தரவாதம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. ஏற்கனவே, 22 விழுக்காடு மக்களுக்கு30 கோடி தடுப்பூசிகள்வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. ஆனால், அதேசமயம் அதிக விலைக்கு வாங்கும் கரோனா தடுப்பூசிகளை, பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. ஏறத்தாழ 30 லட்சம் தவணைகளுக்கான, கரோனா தடுப்பூசி மருந்துகளை, அன்பளிப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு வாரி வழங்குவது நமது மக்களின் நலன்களுக்கு எதிரானது.

இந்திய மக்களின் வரிப் பணத்தை தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அன்பளிப்பாக வழங்கிட செலவு செய்வது மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். நமது நாட்டு மக்களின் தேவைகளுக்கே தடுப்பூசிகள் போதுமானதாக இல்லாத பொழுது, நமது மக்கள் பணத்தில் வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வாரி வழங்குவது சரியல்ல. கரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்திருப்பது, கரோனாவை தடுப்பது என்பதைவிட, அத்தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பெரும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தை அதிகப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

ரூ.35 ஆயிரம் கோடி செலவில் எத்தனை விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்பது குறித்தோ, அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்குவது குறித்தோ எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு கூடுதல் விலையை நிர்ணயம் செய்துள்ளது சரியல்ல. அதிக விலை கொடுத்து கரோனா தடுப்பூசியை வாங்குவதால், மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.35 ஆயிரம் கோடி, தனியார் நிறுவனங்களுக்கே அதிக லாபமாக செல்ல வாய்ப்புள்ளது. கரோனா தடுப்பூசியை மாநில அரசுகள் நேரடியாக வாங்க அனுமதிக்காதது, மாநில உரிமைகளுக்கு எதிரானது. தடுப்பூசியை வாங்கும் முழுமையான ஏகபோக உரிமையை மத்திய அரசு, தன் வசமே வைத்திருப்பது, ஊழல் முறை கேடுகளுக்கே வழி வகுக்கும்.

பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்தவும், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசிகளையும், மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்ய ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் இல்லை. மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு மடை மாற்றும் முயற்சியே மத்திய பட்ஜெட்டில் உள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், தனியார் நிறுவனங்களுக்கு விருந்து படைக்கும் முயற்சியே மத்திய பட்ஜெட்டில் உள்ளது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குழந்தையுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு... விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details