தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற சிறப்பு திட்டத்தை ஆரம்பித்து, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் விசாரணை நடத்தி நிச்சயம் குறைதீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
அதற்காக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறையும் உருவாக்கப்பட்டது. அந்தத் துறை மூலமாக பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தீர்வு கண்டு வந்தனர்.
அதன்படி, அத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், 1,594 மனுக்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு வந்தது. இந்த மனுக்களில் 244 மனுக்கள் நீதிமன்றம் மற்றும் வேறு துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய காரணத்தினால் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறைக்கு வந்த 1350 மனுக்களில் நேற்று வரை 938 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்டுள்ள மனுக்களில் 291 மனுக்கள் கொடுக்கல் வாங்கல் தகராறு, 278 மனுக்கள் சொத்து தகராறு, 70 மனுக்கள் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுத்த நிறுத்தவும், 51 மனுக்கள் காவல் நிலைய சேவைகள் வேண்டியும், 58 மனுக்கள் குடும்ப தகராறு, இதர காரணங்களுக்காக 190 மனுக்கள் வந்துள்ளது.
மீதமுள்ள 412 மனுக்கள் மீது உடனே விசாரணை நடத்தி தீர்வு காண டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றபோது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மூலம் பெறப்பட்ட மனுக்களை 30 நாள்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:281 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!