சென்னை: தலைமைச் செயலக குடியிருப்பு காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்ததாக விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான விசாரணையின்போது விக்னேஷ் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து கொலை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது சிபிசிஐடி சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ் , காவல்துறையினர் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயிரிழந்த விசாரணை கைதி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், “காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் என்பவர் மனுதாரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து வழக்கை முடிக்க முயற்சித்ததால், விசாரணை நியாயமாக நடக்குமா என்ற அச்சம் எழுந்தது. இந்த வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை” என வாதிடப்பட்டது.