சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த ஓராண்டில் மட்டும் 964 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையின் மையப்பகுதிகளில் மட்டும் பார்த்தால், 224 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளன.
இதற்கு 728 கோடி ரூபாய் நிதி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவை சிங்காரச் சென்னை திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சீத்தம்மாள் காலணி, தியாகராய நகரில் ஜி.என்.ரோடு, பசுல்லா சாலை, அசோக் நகர், மேற்கு மாம்பலத்தில் ரங்கராஜபுரம், விருகம்பாக்கம், வடசென்னையில் அம்பேத் கல்லூரி சாலை, புளியந்தோப்பு மற்றும் கொளத்தூர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன.
இதனை தலைமைச் செயலாளர் உடன் நேரில் ஆய்வு செய்துள்ளோம். இவை தவிர, நீண்டகால பணிகளாக கொசஸ்தலை ஆறு, கோவளம் பகுதியை இணைக்கும் வகையில் மடிப்பாக்கம், ஆலந்தூர் போன்ற இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம் வெறும் ஆறு மாதங்களில் முடிவுறும் பணிகள் இல்லை.
அதேநேரம் சிங்காரச் சென்னை திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை தீவிரப்படுத்தி முடித்துள்ளோம். நெடுஞ்சாலைத்துறை சார்பில் வால்டாக்ஸ் சாலை, அசோக் நகர் முதல் அடையாறு வரையிலான சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவர்களும் உரிய கால கட்டத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்கள். நீர்வளத்துறை சார்பில் நடக்கும் பக்கிங்ஹாம் ஓடை, ஓட்டேரி நல்லா ஓடை, விருகம்பாக்கம் ஓடை ஆகியவற்றை தூர்வாரி பராமரிக்கும் பணியை செய்து வருகிறார்கள்.