சென்னை:நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ''SK 20'' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் ஏற்கெனவே ஆவலை குவித்த நிலையில், அடுத்த அதிரடியாக படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அவரது பங்களிப்பு மிகப்பெரிய பலமாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களைக் குவித்தவர், மரியா. இப்படத்திற்காக பல கலைஞர்களை பரிசீலித்த படக்குழு இறுதியாக மரியாவை தேர்வு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் ஏற்கெனவே பங்கேற்று நடித்து வருகிறார்.
இப்படத்தை சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமான 'ஜதி ரத்னதாலு' படம் மூலம் புகழ் பெற்ற அனுதீப் KV இயக்குகிறார். நாராயண்தாஸ் நரங், சுரேஷ் பாபு, மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனும், சத்யராஜும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் முக்கியப் பகுதிகள் காரைக்குடி, பாண்டிச்சேரியில் படமாக்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் - அனுதீப் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்மன்ற சந்திப்பில் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்த நடிகர் அருண் விஜய்!