சென்னை:பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் தங்கள் கல்வி நிறுவனம் குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனாலும் அதனை உயர்கல்வி நிறுவனங்கள் முறையாக பயன்படுத்துவதில்லை.
இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் மமிடால ஜெகதேஷ் குமார் வெளியிட்டுள்ள தகவலில், “உயர்கல்வி நிறுவனங்களின் விபரங்களை மாணவர்கள், பெற்றோர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், அரசு உள்ளிட்ட பல்வேறுத் தரப்பினர் இணையதளங்களில் இருந்து சில அடிப்படைத் தகவல்களைப் பெற விரும்புகின்றனர்.
பல பல்கலைக்கழகங்களின் இணையதளங்கள் அவற்றின் பல்கலைக்கழகம் தொடர்பான அடிப்படை குறைந்தபட்ச தகவல்களை வழங்குவதில் குறைபாடுள்ளதோடு மட்டுமல்லாமல், பல நேரங்களில் அவற்றின் இணையதளங்கள் செயல்படாமலும் புதுப்பிக்கப்படாமலும் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இது நிறைய சிரமங்களையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.
தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் மூன்றாம் ஆண்டைக் கொண்டாடும் இந்த முக்கியமான தருணத்தில், பல்கலைக்கழகங்கள் தங்கள் இணையதளத்தில் அடிப்படை குறைந்தபட்ச தகவல்களையும், புதுப்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தையும் வழங்க விரும்புவது விவேகமானதாக இருக்கும். இந்த தகவல்களின் சரிபார்ப்பு பட்டியலை பல்கலைக்கழகங்கள் தங்கள் இணையதளங்களில் வழங்குவதற்காக வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திட்டமிட்டப்படி அக்.13ல் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: டிட்டோ ஜாக் அறிவிப்பு