சென்னை உயர் நீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவும், ஆயுள் தண்டனையை சாதாரண தண்டனைகளாகவும் மாற்றியுள்ளன. உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு நேற்று (ஜூன் 22) வழங்கியது.
உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் தீர்ப்பின் சாராம்சங்கள்:
"இந்த வழக்கில் ஏராளமான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அரசு தரப்பு காட்டிய போதும், சின்னசாமி மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தவறி விட்டது" எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனையும், மதனையும் உடுமலைப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் சின்னசாமி தங்க வைத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது.
மேலும் பழனி அருகேயுள்ள பூங்காவில் சின்னசாமியை மூன்று பேர் சந்தித்து பேசியதாகக் கூறும் குற்றச்சாட்டு, சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது எனவும் உயர் நீதிமன்றம் எடுத்துரைத்தது.
இதுதொடர்பாக சாட்சியளித்தவர்களுக்கு சின்னசாமியைத் தவிர, வேறு எவரையும் தெரியாது என்றும்; குற்றம்சாட்டப்பட்ட ஜெகதீசன் மற்றும் மணிகண்டனை கைது செய்த முக்கிய சாட்சியான உடுமலைப்பேட்டை காவல் ஆய்வாளர் வெங்கட்ராமனை விசாரிக்காதது ஏன் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
காவல் ஆய்வாளரான வெங்கட் ராமன், சம்பவம் குறித்து தகவலறிந்தும் உடனடியாக புகார் தெரிவிக்காததும்; சங்கரை கொல்வதற்காக சின்னசாமி, ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்து ஜெகதீசனிடமும், செல்வகுமாரிடமும் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசுதரப்பு தவறியது, இவ்வழக்கில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அதனால் சின்னசாமி, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்படுகிறார் என உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
குழப்பிய கெளசல்யா:
இந்த வழக்கில் முதல் சாட்சியான கெளசல்யா, தனது குறுக்கு விசாரணையின் போது, ஆறு பேர் தன்னையும், தன் கணவர் சங்கரையும் தாக்கியதாகக் கூறினார். ஆனால், அவரால் ஐந்து பேரை மட்டுமே அடையாளம் காட்ட முடிந்தது.
கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களைப் பற்றியும், அவரால் கூற முடியவில்லை. ஒரு குற்றம் நடைபெற 90 விநாடிகள் ஆகலாம். இந்த நேரம் நேரடி சாட்சியால் எளிதில் மறக்க முடியாதது. முழு நினைவுடன் இருந்த அவர், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை நிச்சயமாக நினைவில் வைத்திருக்க முடியும்.
முதலில் ஆறு பேர் தாக்கினார்கள் எனக் கூறிய கெளசல்யா, பின்னர் ஐந்து பேர் என மாற்றிக் கூறியுள்ளார். நேரில் பார்த்த சாட்சியின் சாட்சியம், கோர்வையாகவும், நம்பகத்தன்மையுடனும், இருந்தால், அதுவே தண்டனை விதிக்க போதுமானதாக இருக்கும். ஆனால், கெளசல்யாவின் பதில் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவதுபோல் இருந்ததால், தண்டனை விதிப்பதில் உயர் நீதிமன்றம் சில மாறுதல்களைக் கொண்டு வந்தது.
மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை வரை:
சின்னசாமி, மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் மொபைலில் பேசியுள்ளார் என்பதைத் தவிர, குற்றச்சதியில் அவரை சம்பந்தப்படுத்த, வேறு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும்; அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்தது.
உடுமலை சங்கர் மீதான தாக்குதலின் போது காயமடைந்தவர்கள் அளித்த சாட்சியத்தை நிராகரிக்க எந்தக் காரணமும் இல்லை எனவும்; இந்த வகையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஐந்து பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை அரசுதரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது. ஆனால், அவர்கள் சதியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றது உயர் நீதிமன்றம்.
அதேபோல், திட்டமிட்டு, இரக்கமற்ற முறையில் அப்பாவி குழந்தைகள், ஆயுதங்களற்ற நபர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டால், அந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்றும்;
இந்த வழக்கில் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஐந்து பேரும் இளம் வயதினர் என்பதாலும்; இதற்கு முன் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதாலும்; விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
தள்ளுபடி செய்யப்பட மேல்முறையீட்டு மனுக்கள்:
அதேபோல, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜ் மீதான குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.
வழக்கின் சாட்சிகள், ஆதாரங்களில் இருந்து, கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமிக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும்; திருப்பூர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனவும் கருதிய உயர் நீதிமன்றம் அதேபோல, பாண்டிதுரை உள்பட இருவரின் விடுதலையிலும் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்றும்; இவர்கள் மூன்று பேரின் விடுதலையை எதிர்த்த காவல் துறையின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன எனவும் தீர்ப்புரையில் தெரிவித்தது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்னசாமி, தன்ராஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதால், உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும் எனவும்; ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஐந்து பேரும் ஏற்கெனவே அனுபவித்த தண்டனையைக் கழித்துக் கொள்ள வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க:'கரோனா போரில் வெற்றியடைந்தே ஆக வேண்டும்' - அமைச்சர் பாண்டியராஜன்!