கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த ஆறாம் தேதி அன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவருடன் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் ஞானசேகரன், கால்நடை பல்கலை துணைவேந்தர் பாலச்சந்திரன் ஆகியோர் சென்றனர்.
கால்நடைகள் குறித்து ஆலோசனையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன். கால்நடை வளர்ப்பு, கால்நடைகளை பராமரித்தல், கோழி இனங்களை வளர்த்தல் ஆகியவை குறித்து கேட்டறிந்து தமிழ்நாட்டில் செயல்படுத்த அமைச்சர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். முதலில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, சேலத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவை பார்வையிட்டு, சிட்னி பல்கலைக்கழகத்தின் பங்கேற்பினை அளிக்க அறிஞர் குழு இந்தியா வர இருப்பது உறுதி செய்யப்பட்டது. கால்நடை பல்கலைக்கழகத்துடன், சிட்னி பல்கலைக்கழகம் இணைந்து ஆராய்ச்சி மையம் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாணவர், பேராசிரியர், விஞ்ஞானிகள் பரிமாற்ற புரிந்துணர்வு மேற்கொள்ள ஒப்புதலும் பெறப்பட்டது.
அடுத்ததாக சிட்னி பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து நகருக்கு அமைச்சர் செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.