தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய தலைமைக்குத் தயாராகும் திமுக இளைஞரணி... உதயமாகிறாரா உதயநிதி? - stalin mk

திமுக இளைஞரணியின் புதிய செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கபட இருக்கிறார், அதற்கான ஏற்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்று வருவதாக மார் தட்டுகின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

உதய்

By

Published : Jun 18, 2019, 11:46 PM IST

திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதன் செயலாளராக இருந்து வழி நடத்தியவர் ஸ்டாலின். கட்சியின் பொருளாளராகவும், இளைஞரணிக்கு செயலாளராகவும் செயல்பட்டு வந்த அவர், கருணாநிதி உடல்நிலை காரணமாக வீட்டில் ஓய்வெடுக்கத் தொடங்கிய பின்னர், கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வெள்ளக்கோயில் சாமிநாதன்

அதன்பின்னரே, தான் வகித்து வந்த இளைஞரணி செயலாளர் பொறுப்பிற்கு தனக்கு நெருக்கமான கொங்கு மண்டல முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான வெள்ளக்கோயில் சாமிநாதனை ஸ்டாலின் நியமித்தார்.

ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்த பொறுப்பு என்பதால், திமுக இளைஞரணி செயலாளர் பதவியின் மீது உடன்பிறப்புகளுக்கு எப்போதுமே தனி கவனம் உண்டு.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் திமுகவினருக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கும் நிலையில், உதயநிதியின் தேர்தல் பரப்புரைகளும், அவரின் சுற்றுப் பயணமும் தேர்தல் முடிவுகளில் பெரும் பங்கு வகித்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.

அன்பில் மகேஷ், உதயநிதி

உதயநிதியின் நிழலாக வலம்வரும் அன்பில் மகேஷ், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகிவிட்டார். முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி எம்.பி ஆகிவிட்டார். ஆனால், உதயநிதிக்கு இன்னும் கட்சியில் கூட பொறுப்பு வழங்கப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் வருத்தத்தில் இருப்பதாகத் தகவல் வெளியானது.

உதயநிதிக்கு முத்தமிடும் ஸ்டாலின்

இதற்கிடையே, மாவட்டச் செயலாளர்கள் சிலர் உதயநிதிக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என நேரடியாகவே தலைமைக்கு மனு கொடுத்துவிட்டார்களாம். குறிப்பாக, திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி தொடர்பாக உதயநிதி வெளியிட்ட கருத்துகள் தொண்டர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதாகவும், அவருக்கு கட்சியில் பதவி வழங்க இதுவே சரியான நேரம் எனவும் தலைவர் ஸ்டாலினிடம் முக்கிய நிர்வாகிகள் கூறியிருப்பதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின்

இதன் விளைவாகதான் திமுக இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமையிடம் வெள்ளக்கோவில் சாமிநாதன் கடிதம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, திமுகவின் புதிய இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்படுவார் என்றும், ராஜ்ய சபா உறுப்பினராக வெள்ளக்கோயில் சாமிநாதன் அமர்த்தப்படுவார் எனவும் திமுக நிர்வாகிகள் குஷியாக கூறி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details