சென்னை:போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம், நடிகர் தலைவாசல் விஜய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆவடி காவல் ஆணையரகம் ஏற்பாட்டில் போதை இல்லா தமிழ்நாடு உருவாக்குவதற்காக நீச்சல், சைக்ளிங், ஒட்டப்பந்தயம் ஆகிய டிரையத்லான் நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 500 பேர் பதிவு செய்துள்ளனர். ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் தனித்தனியே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் ஜூனியர் (16 மற்றும் 17), சீனியர் (18+), மற்றும் முதுநிலை (40+) ஆகிய 3 வயது பிரிவுகள் உள்ளன. 3 வயதுப் பிரிவினரும் தூரம் - 750 மீ நீச்சல், 20 கி.மீ., சைக்கிள் மற்றும் 4 கி.மீ., ஓட்டம் ஆகியவற்றில் போட்டியிட்டனர். 18 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 500+ உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியா CWG 2022, ஆசியக் கோப்பை போன்றவற்றில் கலந்து கொண்ட வீரர்களும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஜப்பானில் நடைபெரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
விளையாட்டு போட்டிக்கான டிஷர்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தினார். மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் இருந்து பெறப்பட்ட கட்டண தொகை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 200 ரூபாயை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வழங்கினர்.