தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'5 மாசம் ஆச்சு; ஆனா கரோனா பிரச்னை முதலமைச்சருக்கு புரியல' - உதயநிதி காட்டம்

சென்னை: கரோனா பரவத் தொடங்கி ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த வைரஸ் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ளவில்லை என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin

By

Published : Jun 15, 2020, 8:05 PM IST

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சில நாள்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.

சில நாள்களுக்கு முன் ஊரடங்கு நீட்டிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு கருத்தை முன்னுக்குப்பின் முரணாக கூறிவருவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சரின் ஊரடங்கு குறித்த ட்விட்டர் பதிவுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி இன்று விமர்சித்துள்ளார். அதில், "கடந்த 3 நாள்களுக்கு முன்பு நீங்கள் சொன்ன வதந்தி, இன்று உங்களின் பெயரிலேயே உண்மையாகியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் வைரஸ் குறித்த அறிவியலை ஐந்து மாதங்களாகியும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இந்தக் குளறுபடிகள் காட்டுகின்றன. அதனால்தான் சொல்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், "அப்படி யார் மீதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்களை நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள் என்பதை நான் யூகித்துவிட்டேன். ‘என் மனதிலிருந்த ஊரடங்கு நீட்டிப்பு யோசனையைத் திருடி வெளியிட்டுவிட்டனர்’ என்று மேலும் சிலபல வழக்குகளை அவர்கள் மீது போடுவீர்கள்தானே" என்று பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் முன்பு கூறியதற்கு மாறாக ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உதயநிதியின் இந்தப் பதிவு ட்விட்டரில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: குழந்தைகளின் உயிரோடு விளையாடினால், அதற்கு பழனிசாமியே பொறுப்பு - உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details