சென்னை:கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அரசு வேலை வாய்ப்பு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசு நடத்தும் இந்த இலவச பயிற்சி திட்டம் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நீட் தேர்விற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும், அதனை ரத்து செய்யத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கூடாது என்று வலியுறுத்தும் தமிழக அரசு, அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு சேர்க்கைக்குக் கடந்த சனிக்கிழமை நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது முரண்பாடாக அமைந்திருக்கிறதே? இதற்குக் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்க அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இதுபோன்று நடந்திருக்கிறதா? என அமைச்சர் பொன்முடி மற்றும் முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோரிடம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின், இந்த தேர்வு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குரூப் 2 தேர்வு குளறுபடி விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். முதல்வர் பிறந்தநாளில் பல்வேறு தேசிய தலைவர்கள் கலந்து கொண்டதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, பாரதிய ஜனதா கட்சி வேண்டும் என்றே பொய்யான தகவல்களைத் தமிழகத்தில் பரப்பியது எனக் கூறினார்.