சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "என்னை முதலமைச்சர் ஆக்குவது மட்டும்தான் திமுகவின் லட்சியம் என அமித்ஷா, தமிழ்நாட்டிற்கு வந்து கூறிவிட்டு சென்றுள்ளார். நாம் மக்களை சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று அமைச்சராக இருக்கிறேன். உங்களுடைய மகன் எப்படி பிசிசிஐ-ன் தலைவர் ஆனார்?, மகன் எத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளார்?.,உங்களுடைய மகன் எத்தனை ரன் அடித்தார்? அதை நான் கேட்டிருக்கேனா?.
அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. இவர் ஜெயின் குசும் பின்சர்வ் இன்று நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2014 ஆம் ஆண்டு 75 லட்ச ரூபாயாக இருந்த நிறுவனத்தின் மதிப்பு, தற்பொழுது 130 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எப்படி வந்தது இந்த வளர்ச்சி?. இதற்கெல்லாம் அமித்ஷா பதில் சொல்வாரா?. இவர் தமிழ்நாட்டுக்கு வந்து என்னை குறை கூறிவிட்டு சென்று இருக்கிறார்" என காட்டமாக கூறினார்.
முன்னதாக ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் அண்ணாமலை மேற்கொள்ளும் பாத யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பேசிய அமித்ஷா, "எதிர்க்கட்சிக் கூட்டணியினர் நாட்டை வளர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை, அவர்களின் குடும்பத்தை வளர்க்க நினைக்கிறார்கள். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும் என்று ஆசை.