கருணாநிதி உயிருடன் இருந்தபோது வாரிசு அரசியல் என்று திமுக மீது இருந்த விமர்சனம் ஸ்டாலின் காலத்திலும் தொடர்கிறது. தனக்குப் பின் கட்சிக்கு குடும்பத்திலிருந்து யாரும் வரமாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறிய பிறகு திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி அறிவிக்கப்பட்டார்.
இதனால், திமுக ஒரு கம்பெனி என முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தது போல் ஏராளமான விமர்சனங்களை அறிவாலயம் சந்தித்தது. ஆனாலும், உதயநிதி ஸ்டாலின் உற்சாகம் குறையாமல் துடிப்போடு களமாடிக்கொண்டிருக்கிறார். அவரை கட்சியும் அவ்வாறே அறிவுறுத்தி அனுப்புகிறது.
ஆர்ப்பாட்டம் என்றால் முன்னால் நிற்பது, கூட்டணிக் கட்சிகள் குறித்த விஷயத்தை மேடையில் படார் என்று பேசுவதும், ஊடகங்களிடம் சகஜமாக நெருங்குவதையும் உதயநிதி கொண்டிருக்கிறார்.
ஆனால், அந்த விஷயங்கள் எல்லாம் பின்னாளில் கோட்டைக்குப் பாதை போடுவதற்காக அவர் செய்கிறார் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்தச் சூழலில் அதனை மெய்ப்பிக்கும் விதமாக அவருக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதாக ஒருசிலர் கூறுகின்றனர்.