சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் எனப் பலரும் பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது, தங்களை எதிர்த்துக் களம்காணும் வேட்பாளர்களையும், அவர்களின் கட்சிகளையும் தாக்கிப் பேசுவது இயல்பு. ஆனால், தற்போது தேர்தல் விதிமுறைகளை மீறியும், தனிநபர்களைக் கடந்து குடும்பத்தினர், உயிரிழந்தவர்கள் எனப் பலர் குறித்தும் கருத்துத் தெரிவிப்பதாக பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி, திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியின் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது எய்ம்ஸ் மருத்துவமனையில் அடிக்கல்லைத் திருடியது, பிரதமர் மோடியை அவமரியாதையாகப் பேசியது, தேர்தல் விதிமுறைகளை மீறியது எனப் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
முக்கியமாக, மார்ச் 31ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு தனக்கு அரசியலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறிய பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசினார்.
அப்போது, 'பிரதமர் மோடி - அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்டப் பலரை ஓரங்கட்டிவிட்டு பிரதமரானார். அவர் குஜராத் முதலமைச்சரானதும் அவ்வாறே' என்றார். அதுமட்டுமின்றி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரும் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமலேயே உயிரிழந்தனர் எனவும் கூறியுள்ளார். இவரது இந்தக் கருத்து பொதுவெளியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவரது இந்தக் கருத்திற்கு சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரது குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.