தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”இந்தியை ஒன்றிணைக்கும் மொழியாக கூறுவது அபத்தமானது”... அமித்ஷா பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! - உதயநிதி இந்தி நாள்

udhayanidhi stalin condemn Amit Shah: நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி உள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 6:30 PM IST

சென்னை:இன்று செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்துள்ள பேட்டியில் “இந்தி திவஸ் நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்தி எப்போதும் ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக இந்தி உள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இந்தி மாநாடு இந்த ஆண்டு பூனே நகரில் நடைபெறும்” என கூறினார்.

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.

தமிழ்நாட்டில் தமிழ், கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது.

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார். முன்னதாக சனாதன ஒழிப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்து மதத்தை வெறுப்பதையே காட்டுகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details