சென்னை: சேப்பாக்கத்தில் அமைந்துள்ள, கலைவாணர் அரங்கில், வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது.
முதன்முறையாக மாநில அமைச்சராகியுள்ள (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை (காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை) தாக்கல் செய்தார்.
பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாம் நாள்
இதையடுத்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
அன்றைய தினமே, நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பட்ஜெட் அறிவிப்பு மீதான விவாதம், கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (ஆக 18) நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக பேசினார்.
உதயநிதியின் கன்னிப்பேச்சு நீட் தேர்வு ரத்து
அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது நீட் தேர்வு. தங்கை அனிதாவில் தொடங்கி 14 மாணவ- மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கடந்த ஆட்சியில் அதிமுக அரசு நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை எதுவும் அதிமுக அரசு செய்யவில்லை. திமுக அரசில் நீட் ஒழிப்பின் முதல்படியாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கருத்துக்கேட்புக் குழு ஒன்றை நியமித்து, அந்தக் குழு தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது.
இப்படி பணிகள் சென்று கொண்டிருக்கும்போதே, நீட் தேர்வு ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்விகள் வருகின்றன. நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. இதில் கட்சி பேதமெல்லாம் கிடையாது.
கோரிக்கைகள்
எனவே, நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.
நீட் ஒழிப்புப் போராளி அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சூட்ட வேண்டும் என்று தங்கை அனிதாவின் சகோதரர் மணிரத்னம் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அப்படி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட. இக்கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என நம்புகிறேன். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.
எங்கள் தொகுதி
எனது தொகுதியில் உள்ள கொய்யாத்தோப்பு, காக்ஸ் காலனி, நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய நான்கு குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள் பழையன ஆகிவிட்ட காரணத்தால், அவற்றிற்கு பதிலாக புதிய குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும்.
எங்கள் தொகுதியில் அயோத்திக்குப்பம், நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் போன்ற பின்தங்கிய பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், பெண்களுக்காக, பெண்களே இயக்கும் பிரத்யேக கூட்டுறவுக் கடன் சங்கங்களை உருவாக்க வேண்டும்.
என் தொகுதியிலுள்ள கழிவுநீர்க் குழாய்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதிருந்த மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டவை. அதனால் அடிக்கடி, கழிவுநீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
அயோதிக்குப்பம், நடுக்குப்பம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்திற்கு, பெண்களுக்கு என தனி கூட்டுறவு வங்கியை உருவாக்க வேண்டும்.
மு.க. ஸ்டாலினுடன் உதயநிதி
மூட நம்பிக்கை
மத்திய அரசு கரோனாவை விரட்டுவதில், மூட நம்பிக்கையுடன் செயல்பட்டது. மத்திய அரசு எதைச் சொன்னாலும் அதை அப்படியே செய்யும் அடிமை அதிமுக அரசு.
மத்திய அரசு கூறியதை போல் மணியடித்தது, கைத்தட்டி, ஒலியெழுப்பி கரோனாவை விரட்டியதாக எண்ணி மூட நம்பிக்கையுடன் செயல்பட்டது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் கரோனாவின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. ஆனால் தற்போதைய கழக அரசு விழிப்புடன் செயல்பட்டது. புற்று நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஸ்டாலின் பேருந்து
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இலவச தொலைக்காட்சியை, கலைஞர் தொலைக்காட்சி என்று தான் சொல்லி வந்தார்கள்.
அதே போல் இன்று திமுக வந்தவுடன் மாநகர பேருந்து பெண்கள் இலவசமாக செல்வதால், தற்போது ஸ்டாலின் பேருந்து என்று சொல்லி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை சுதந்திர தின உரையில் ஏன் குறிப்பிடவில்லை - அதிமுக கேள்வி