சென்னை: கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர், சோபனா. இவர் தனது கணவருக்கு அரசாங்க வேலை வாங்க வேண்டும் என தனது தோழியிடம் தெரிவித்துள்ளார். அவர் மூலம் அறிமுகமான சென்னை ராமாபுரம் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராக உள்ள ராஜசேகர், அரசாங்க வேலையினை தன்னால் வாங்கித் தர முடியும் எனக் கூறி நிதி மற்றும் மனித மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் சில அமைச்சர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்துள்ளார்.
இதனால் ராஜசேகர் சோபனாவிடம் ’ரூ.50,000 கொடுத்தால் நிச்சயம் வேலை வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனால் ஷோபனா, ராஜசேகர் வங்கி கணக்குக்கு ரூ.50 ஆயிரம் அனுப்பி உள்ளார். இதையடுத்து ஒன்றரை மாத காலமாக ராஜசேகர் எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து ஷோபனா ராஜசேகரிடம் கேட்டபோது மீண்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் கொடுத்தால் விரைவில் வேலை வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். மீண்டும் இதனை நம்பி சோபனா ரூ.1.50 லட்சம் பணத்தை ராஜசேகரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் மாநகராட்சி பணியென கூறி ஒரு வேலையில் ஷோபனாவின் கணவரை சேர்த்துள்ளார். அதன் பிறகும் சில வேலைகள் இருப்பதாகக் கூறி சோபனாவிடம் அடிக்கடி ராஜசேகர் பணம் வாங்கி உள்ளார். இந்த நிலையில் சோபனாவின் கணவர் பணி புரியும் இடத்தில் தான் 2 லட்சம் கொடுத்து வேலை வாங்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட உடன் பணி புரிந்தவர்கள் ’இது நிரந்தர வேலை இல்லை’ என அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சோபனாவிடம் தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த அவர் ராஜசேகரிடம் இது குறித்து கேட்ட போது, ’பணம் கொடுத்த விஷயத்தை ஏன் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சொன்னீர்கள்’ எனக் கூறி ராஜசேகர் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் இருவரும் சேர்ந்து சோபனாவின் கணவரை அடித்துள்ளனர்.
பின்னர் ராஜசேகர் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் தாங்கள் இருவரும் போலீசின் இன்பார்மர் என்று கூறி நீங்கள் பணிபுரியும் இடத்தில் ’யாருக்காவது கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.