தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாத்தான்குளத்தில் சிறைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் இச்செயலைக் கண்டித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”சாலையோரம் கடை வைத்திருக்கும் பெண்ணை காவலர் ஒருவர் தரக்குறைவாகத் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அவரது மகன் அதனைத் தட்டிக் கேட்டுள்ளார். இதற்குக் காவல் துறையினர் அந்த இளைஞரைச் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. காவல் துறையினரிடமிருந்து மகனைக் காப்பாற்ற காவலர்களின் காலில் விழும் தாய் கண்ணீர் விட்டு அழும் காட்சி பார்ப்பவரைக் கலங்க வைக்கிறது.