சென்னை: பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்யும் நபரை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் பல்லாவரம் துரைப்பாக்கம் சாலையில் உள்ள முட்புதரில் ஒருவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாம்பரம் சானிடோரியத்தைச் சேர்ந்த அர்ஜூன் (24) என்றும்; பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரைத் தொடர்புகொண்டு கேட்டால் கஞ்சா கொண்டு வந்து தருவார் என்றும்; அதை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர் அர்ஜூன் கூறிய நபரை தொடர்பு கொண்டு கல்லூரி மாணவர்கள்போல் பேசி கஞ்சா வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அதற்கு,’ அருண் என்னிடமிருந்த கஞ்சா அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. நீங்கள் பல்லாவர தினேஷிடம் கேளுங்கள்’ என ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து உள்ளார்.
தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு காவல் துறையினர் கேட்டபோது பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வருமாறு கூறியுள்ளார். அங்கு தினேஷ் வந்ததும் காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அந்த நபர் நடிகரும் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி நற்பணி மன்ற பல்லாவரம் நகரச்செயலாளர் எனத் தெரியவந்தது.
அர்ஜுன் மற்றும் தினேஷ் கடந்த மூன்று ஆண்டுகளாக காவல் துறையினரிடம் சிக்காமல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரிடம் இருந்தும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த பல்லாவரம் காவல் துறையினர், இருவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரியான வாண்டு (எ) அருணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:போதையில் புத்தி மாறிய இளைஞரை போட்டுத்தள்ளிய 'அக்கா கேங்க்'