நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள் அதிகளவில் உயிரிழந்ததாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 3ஆம் தேதி ட்வீட் செய்திருந்தார். அதில்,"இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் சொல்வது உண்மைக்கு புறம்பானது, மக்களிடையே பொய்யான செய்தியைப் பரப்புவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், நாட்டிலேயே கரோனா பாதிப்பில் உயிரிழந்த மருத்துவர்களில், தமிழ்நாட்டில்தான் 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) வெளியிட்டது.
இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர் விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்தார். இதனைத்தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கடும் விமர்சனத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "கரோனா தொற்றால் நம் மாநிலத்தில் அதிக மருத்துவர்கள் இறக்கிறார்கள் என நான் சுட்டிக்காட்டியபோது அமைச்சர் விஜயபாஸ்கர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவதூறு கிளப்பிட்டார், வழக்கு போடுவோம்’ என்றும் மிரட்டினார். ஆனால், இன்று இந்திய மருத்துவ கூட்டமைப்பே (IMA) தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் என பெயர், முகவரியோடு பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பு சொல்வதும் பொய்யென வழக்குப் போடுவார்களா? மக்கள் மரணத்தை மறைத்தவர்கள் மருத்துவர்களின் மரணத்தையும் மறைப்பதோடு, தொற்றால் இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் நிவாரணத்தை 25 லட்சமாகக் குறைத்துள்ளனர். இது தான் உயிரைப் பணயம் வைத்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு அரசு செலுத்தும் மரியாதையா? இது அவர்களுக்கு செய்யும் துரோகமில்லையா? இடமாறுதலுக்கு இவ்வளவு, இந்தப் பொறுப்புக்கு அவ்வளவு என கமிஷனில் காட்டும் அக்கறையை, உயிர் காப்பவர்களின் நலனிலும் காட்ட வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என பலியான முன்கள வீரர்களின் உண்மையான பட்டியலை வெளியிட்டு அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்" என, அந்த ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:பகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்: 'அமைச்சர் விளக்கமளிப்பாரா?' - ஸ்டாலின் கேள்வி