அமெரிக்காவின் மிகப் பெரிய டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனமான ஊபர், இந்தியாவிலும் சேவை வழங்கி வருகிறது. சிறிய, பெரிய வகை கார்கள், ஒரு நாள் வாடகை கார்கள், ஆட்டோ, பைக், பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட சேவைகளை இணைய செயலி மூலமாக வழங்கி வருகிறது. போக்குவரத்து சேவையில் கடும் போட்டி நிலவி வருவதால், புதிய முயற்சிகளை ஊபர் கையாண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பொது போக்குவரத்து சேவை ஊபர் செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது போக்குவரத்து நேரங்கள், பயணக் கட்டண விவரங்கள், வழிகள், அருகாமையில் உள்ள பேருந்து ரயில் நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்களைப் புதிய பொது போக்குவரத்து சேவையில் பார்த்திட முடியும். இதுமட்டுமின்றி குறைந்த நேரத்தில் திட்டமிட்டுள்ள இடத்தினை அடைய, எந்த வழியைத் தேர்வு செய்யலாம் என்ற விவரமும் அதில் இடம்பெறுகிறது. மேலும், பேருந்து, ரயில்களின் வருகை, புறப்படும் நேரங்கள், இறங்கும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நடந்து செல்வதற்கான வழி உள்ளிட்ட வசதிகளும் அடங்குகிறது. இந்த செயலி உதவியுடன் பயணிகள் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை முழுமையான வழிகாட்டுதல்களைப் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.