கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான கோயம்பேடு காய்கனி, மலர் அங்காடி வளாகப் பகுதியில் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து, ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்தில், மொத்த, சிறு வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய நோய்த்தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை:
- கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும்வகையில் சந்தை வளாக பகுதிக்கு காய் கனிகள், மலர் வாங்க இருசக்கர வாகனத்தில் வருகைதரும் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் காலை 4 மணி முதல் காலை 7:30 மணிக்குள் பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும்.
- இருசக்கர வாகனங்களில் 7.30 மணிக்கு மேல் காய்கறி வாங்கவரும் எவருக்கும் சந்தைக்குள் அனுமதியில்லை. இதனை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல்செய்யப்படும்.
- மூன்று, நான்கு சக்கர சரக்கு வாகனங்களைக் கொண்டு காய்கறிகளை வாங்கி வருகைதரும் வியாபாரிகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாடு இல்லை.
- சந்தைக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக முகமூடி அணிந்துவர வேண்டும்.
- வளாகத்துக்குள் உள்ள அங்காடிகளுக்குச் செல்லும்பொழுது கைகளைச் சுத்தமாக கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கை கழுவிட வேண்டும்
- அங்காடிகளுக்கு வரும் சிறு வியாபாரிகள் அங்கே கூட்டம் கூடுவதைத் தவிர்த்து சமூக இடைவெளியுடன் நிற்பதை உறுதிசெய்ய வேண்டும்
- கோயம்பேடு காய்கனி அங்காடியிலுள்ள மொத்த, சிறு வியாபாரிகள், பணியாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உடல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டன.