சென்னை: வடசென்னை பகுதிகளான முத்தியால்பேட்டை, வண்ணாரப்பேட்டை, யானைகவுனி, ஏழு கிணறு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை வேலைகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக புகார்கள் குவிந்துள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பூக்கடை துணை ஆணையரின் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஒரு திருட்டு சம்பவத்திலும் சிசிடிவி காட்சியில் கொள்ளையர்களின் முகம் பதியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதே போல கடந்த மாதம் முத்தியால் பேட்டை பகுதியில் வீட்டருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதாக ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, தெருவில் சம்பந்தமில்லாத இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு நாளன்று நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மறுநாள் அந்த வாகனத்தை எடுக்க வந்த போது சிசிடிவி காட்சிகளில் திருடனின் முகம் பதிவாகி உள்ளது.
இதையடுத்து பதிவான முக அடையாளங்களை வைத்து தனிப்படை போலீசார் அவர் சென்ற பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது முகம் தெளிவாக பதிந்துள்ளது. விசாரணையில் பழைய குற்றவாளியான எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த ரதீஷ்குமார் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ரதீஷ் குமார், அவரது கூட்டாளி ராயபுரத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன்(29),பைக் மெக்கானிக் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ்(37) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
ரதீஷ் குமார் முத்தியால்பேட்டை, யானை கவுனி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுகலான சந்துகளில் நிற்கக்கூடிய இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு அதிகாலை வேளைகளில் சென்று பைக்கின் சைடு லாக்கை உடைத்து நொடி பொழுதில் இரு சக்கர வாகனத்தை திருடும் செயலில் பல ஆண்டுகளாக செய்து வந்தது தெரியவந்தது.
10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் ரதீஷ்குமார் மீதுள்ள நிலையில் பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. யமஹா ஆர் எக்ஸ் 100 பைக்கின் மீது ஆர்வம் கொண்ட ரதீஷ்குமார், அந்த பைக்கை திருத்தி அமைக்க கோடம்பாக்கத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்த வெங்கடேஷ் என்பவரிடம் சென்ற போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.